ஜோசப் விஜயின் கச்சத்தீவு தொடர்பான கருத்துகள்!
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜயின் கச்சத்தீவு தொடர்பான கருத்துகள் மீண்டும் அரசியல் மற்றும் மீனவர் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர் அமைப்புகள் இந்த விடயத்தில் தங்களது அதிருப்தியையும் எச்சரிக்கையையும் வெளிப்படையாக பதிவு செய்துள்ளன.
யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளன பிரதிநிதி செல்லதுரை நற்குணம், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், கச்சத்தீவு தொடர்பான அரசியல் பேச்சுக்கள் இனிமேல் பொறுப்புடன் முன்வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு விவகாரம் அடிக்கடி பேசப்படும் ஒரு அரசியல் கருவியாக மாறிவிட்டதாகவும், அதனை வைத்து மீனவர்களின் உணர்வுகளை தூண்டுவது நீண்டகாலமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் தற்போது விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் மேடைகளில் கூறப்பட்ட கருத்துகளை தொடர்ந்து முன்வைப்பது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளிலும் மீனவர் வாழ்வாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார்.
கச்சத்தீவு என்பது சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் இலங்கைக்கு உரிய பகுதியாக இருப்பதை இந்திய மீனவர்களும் தமிழக மக்களும் நன்கு அறிந்திருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். ஆகையால், இந்த விவகாரத்தை மீண்டும் அரசியல் ரீதியாக கிளப்புவது வடக்கு மீனவர் சமூகத்தில் கவலை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் கச்சத்தீவு தொடர்பாக தீவிரமான அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், யாழ் மாவட்ட மீனவர் அமைப்புகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த தயங்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வள பாதுகாப்பு என்பவையே முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளன தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் கருத்து தெரிவிக்கையில், தமிழகத்தின் புதிய நிர்வாகம் இந்திய மீனவர்களின் எல்லை மீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
வடக்கு கடற்பகுதிகளில் இந்திய மீன்பிடி படகுகள் அத்துமீறி நுழைவதால் இலங்கை மீனவர்களின் வலைகள் சேதமடைவதுடன், கடல் வளங்களும் பாதிக்கப்படுகின்றன என அவர் கூறினார். குறிப்பாக, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் காரணமாக கடல்சூழல் பாதிக்கப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
தற்போது இந்தியாவில் அமலில் உள்ள கடற்றொழில் தடைக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அதன் பின்னர் மீண்டும் எல்லை தாண்டும் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் மீனவர் அமைப்புகளிடம் காணப்படுகின்றது.
இதனால், இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து நிலையான தீர்வை எடுக்க வேண்டும் என்றும், அரசியல் வாக்குறுதிகளுக்கு பதிலாக மீனவர்களின் வாழ்வாதார பாதுகாப்பே முக்கியமாக கருதப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண மீனவர் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.



No comments:
Post a Comment