எரிபொருள் விலை உயர்வு... பொதுமக்களுக்கு பெரும் சுமை!
நாட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை உயர்வு ஒரு சாதாரண மாற்றமாக பார்க்க முடியாது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்துள்ளார்.
இன்று (06.05.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதை குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை உயர்வின் உடனடி தாக்கம் போக்குவரத்து துறையில் வெளிப்படும் எனவும், குறிப்பாக டீசல் விலை அதிகரிப்பால் தனியார் பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக மாறும் எனவும் அவர் கூறினார்.
இதனால் பயணச் செலவு மட்டும் அல்லாமல், தினசரி வேலைக்குச் செல்லும் மக்கள், மாணவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பலரின் வாழ்க்கைச் செலவு நேரடியாக உயர்கிறது. நகரங்களோடு சேர்த்து கிராமப்புறங்களின் பொருளாதாரமும் இதனால் பாதிக்கப்படுகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல் மற்றும் மூதூர் பகுதிகளின் கீழ் வரும் பல கிராமங்களில் வாழும் மக்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், விவசாயத் துறையிலும் இதன் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. நீர்ப்பாசனம், உரங்கள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து அனைத்தும் எரிபொருளை சார்ந்துள்ளதால் செலவுகள் அதிகரிக்கின்றன.
மீன்பிடித் துறையும் இதனால் பாதிக்கப்படுகின்றது. கடலுக்கு செல்லும் செலவு உயர்வதால் மீனவர்கள் தொழிலை குறைப்பதற்கான சூழல் உருவாகிறது. இதனால் சந்தையில் மீன் வரத்து குறைந்து விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு என்பது பொருளாதார சிக்கல் மட்டுமல்லாமல், சமூக ரீதியிலான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது என அவர் எச்சரித்தார்.
இதனால், இந்த நிலையை கட்டுப்படுத்துவது அரசின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


No comments:
Post a Comment